தமிழீழ அடையாள அட்டையினைப் (TEIC)
பெற்றுக்கொள்வதனூடாக, நான் உறிதிப்படுத்துபவை எவையாயின்:
-
தமிழீழ மக்கள் ஒரு தேசிய இனம். இவர்கள் தமக்கென ஒரு பாரம்பரிய தாயகப் பிரதேசத்தைக் கொண்டவர்கள். தனியே ஒரு மொழி, பாரம்பரியம், கலை, பண்பாடு மற்றும் தனித்துவமான வரலாற்றைக் கொண்டவர்கள்.
-
ஈழத்தமிழரின் வரலாற்று இறைமையின் பாலும் மற்றும் வட்டுக்கோடடைத் தீர்மானத்தின் பாலும் தமிழீழ மக்கள் முழு இறைமைக்கு உரித்தானவர்கள்
-
மேலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கீழ் தமிழீழ இறைமை நிறுவப்பட்டது.
-
தமிழ் மக்கள் மீது பல்வேறு வடிவங்களில் காலங்காலமாக நடத்தப்பட்டு வந்த மற்றும் நடத்தப்பட்டு வருகின்ற திட்டமிட்ட ஒடுக்குமுறைகள், தாக்குதல்கள் அப்பட்டமான இனவழிப்பு நடவடிக்கையே ஆகும்.
தகவல்
ஈழத்தமிழர்கள் ஒரு தேசிய இனம் என்பதனால், அவ்வினத்தின் தனித்துவம் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்றாகும். எமக்கென்று ஒரு பொதுவான மொழி, பொதுவான கலை பண்பாடு மற்றும் பொதுவான வரலாறு உண்டு. இவை அனைத்தும் தமிழரின் பாரம்பரிய தாயகமான தமிழீழத்தில் நிலைநாட்டப்பட்டுள்ளது.
1833ம் ஆண்டு இலங்கைத் தீவில் உருவாக்கப்பட்ட அரசியற் கட்டமைப்பின் காரணமாக, தமிழ்த் தேசியத்தின் தனித்துவம் அச்சுறுத்தல்களைச் சந்தித்து வருகிறது. ஏனெனில், இவ்வரசியற் கட்டமைப்பு தமிழ்த் தேசியத்தை அங்கீகரிக்காமல் இருப்பதும், தமிழ்த் தேசியத்தை திட்டமிட்டு அழிப்பதும் இதற்கு காரணிகளாக அமைகின்றன. அத்தோடு, காலனிய ஆதிக்கத்துக்கு முன் இலங்கைத் தீவில் தமிழர்கள் தங்களுக்கென்ற ஒரு ஆட்சிப் பொறிமுறையினை நடைமுறையில் வைத்திருந்தார்கள். இதன் காரணமாக, தமிழர்கள் தங்களின் தனித்துவத்தினைப் பேணியதுடன், தங்களின் இறைமையினைத் தக்க வைத்திருந்தனர். இவ்வரலாற்று வழிவந்த இறைமையை, போர்த்துக்கேயர் அழித்தனர்.
«Colebrook-Cameron» யாப்பினூடாக, இலங்கைத் தீவின் நிர்வாகம் ஒன்றிணைக்கப்பட்டது. இதனூடாக உருவாக்கப்பட்ட அரசியற் கட்டமைப்புக்குள் தமிழர்கள் சிறுபான்மையினராக இருந்ததால், தமிழர்களின் தேசியம் அச்சுறுத்தல்களுக்கு உள்ளானது. 1931ம் ஆண்டு வரையப்பட்ட «Donoughmore» யாப்பு, இதனைத் தெளிவாக வெளிக்கொணர்ந்தது. ஏனெனில், இந்த யாப்பினூடாக அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டத்துடன், இன ரீதியான பிரதிநிதித்துவம் நீக்கப்பட்டது. இதன் காரணமாக, ஈழத்தமிழர்கள் சிறுபான்மையினராக ஆக்கப்பட்டனர். அத்துடன், முதலாவது வாக்கெடுப்பை தமிழர்கள் புறக்கணித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
1948ம் ஆண்டு இலங்கை பிரித்தானியரிடமிருந்து சுதந்திரம் பெற்றது. அக்காலத்திலிருந்து பிரித்தானியர் விட்டுச் சென்ற இவ்வரசியல் கட்டமைப்புக்குற் மகாவம்சச் சித்தாந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இச்சித்தாந்தத்தின் அடிப்படையில், பௌத்த மதத்தின் தூய்மையினைப் பாதுகாக்கும் இடமாக, இலங்கைத் தீவு தேர்ந்தெடுக்கப்பட்டது என்றும் , அதன் பாதுகாவலர்களாக சிங்களவர்கள் நிர்ணயிக்கப்பட்டனர் என்றும் நம்பப்படுகிறது. அத்துடன், அச்சித்தாந்தத்தின்படி தமிழர்கள் புத்தமதத்தின் எதிரிகளாகவும், இத்தீவின் ஊடுருவிகளாகவும் பார்க்கப்படுகின்றனர். இதனாலேயே «பற-டேமால» எனும் வார்த்தைப் பிரயோகம் தமிழர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது.
அதன் பின்னரான காலத்தில் நடைபெற்ற அனைத்து அரசியல் நிகழ்வுகளும் , இம் மகாவம்சச் சித்தாந்தத்தின் அடிப்படையில், தமிழ்த் தேசியத்தின் அழிப்பை நோக்கமாக் கொண்டு நடாத்தப்பட்டன. இவ்வரசியற் காய்நகர்த்தலோடு, திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களினூடாக தமிழரின் பாரம்பரிய தாயகமான தமிழீழத்தை அழிக்கவும் முன்மொழிந்தனர்.
இந் நடவடிக்கைகளுக்கு எதிராக அகிம்சை வழியிலேயே எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதோடு, தமிழர்கள் தங்களுக்கான இடத்தை இவ்வரசியற் கட்டமைப்புக்குள் தக்க வைக்க முயன்றனர். அகிம்சைப் போராட்டங்களை முடக்கப் பயன்படுத்தப்பட்ட வன்முறை அதிகரித்துச் சென்றமையினால், தமிழர்கள் தங்களின் இறைமையை மீளப்பெற நினைத்தனர். ஏனெனில் அதனூடாகவே தமிழ்த் தேசியத்தின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அதற்காக 1976ம் ஆண்டின் வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதனூடாக தமிழர்களுக்கு ஒரு சுதந்திர, இறைமையுள்ள தமிழீழம் எனும் நாடு கோரப்பட்டது. இவ்வட்டுக்கோட்டைத் தீர்மானம், 1977ம் ஆண்டு தமிழர்களின் ஜனநாயக ஆணையினைப் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
1981ல் யாழ் நூலக எரிப்பினைத் தொடர்ந்தும், 1983ல் கறுப்பு யூலையினைத் தொடர்ந்தும், ஈழப்போர் ஆரம்பமாகியது. இப்போரின் இறுதியிலக்கு தமிழர்களின் ஜனநாயக ஆணையின் அடிப்படையில் நிகழ்த்தப்பட்டது. இதன் பொழுது, தமிழீழ விடுதலைப் புலிகளின் கீழ் தமிழர்களின் இறைமை, இலங்கைக்கு, இந்தியாவுக்கு மற்றும் இரு அந்நிய சக்திகளுக்கு எதிராகப் பாதுகாக்கப்பட்டதோடு, இவ்விறைமை நிர்வாகமயப்படுத்தப்பட்டது. இது «தமிழர்களின் ஈட்டிய இறைமை» என்று அழைக்கப்படும். இவ்விறைமையோடும், இவ்விறைமையை நிர்வாகப்படுத்தும் கட்டுமானங்களோடும் சேர்த்து, ஒரு புதிய சமுதாய வடிவம் ஏற்பட்டிருந்தது. இச்சமுதாயக் கட்டமைப்பில் பெண்ணிய அடக்குமுறை, சாதிய அடக்குமுறை மற்றும் வேறு சமூக அடக்குமுறைகளும் களையப்பட்டிருந்தன.
பூலோக அரசியலின் காரணமாகவும், உலகத்தில் நிலவுகின்ற ஒரு புதிய கோட்பாட்டின் அடிப்படையிலும், தமிழர்களின் ஈட்டிய இறைமை அழிக்கப்பட்டது. இவ்வழிவு இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்டாலும், அமெரிக்கா, இந்தியா, பிரித்தானியா, சீனா போன்ற நாடுகளினதும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் பங்களிப்பு உள்ளது. இதனால், இவர்களின் கைகளில் தமிழர்களின் குருதிக்கறை படிந்துள்ளது.
அக்டோபர் 2008க்கும் ஜூலை 2009க்கும் இடையில், 146’679 தமிழர்கள் காணாமல் போயுள்ளனர். போரில் இறந்தவர்களின் பாரிய எண்ணிக்கையோடும், யுத்தத்தின் முடிவோடும் தமிழர்களின் நிலை இன்னும் போசமடைந்துள்ளது. ஏராளமான தமிழர்களின் நிலப்பரப்புகள் இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டு, அதில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் அமைக்கப்படுவதினால், தமிழர் தாயகத்தின் கட்டமைப்பு மாற்றியமைக்கப்படுகிறது. இதன் காரணமாகவும், வேறு நடவடிக்கைகளின் காரணமாகவும் தமிழ்த் தேசியத்தின் அழிவு முழுமையடையப்போகிறது.
இலங்கைத் தீவின் வரலாற்றினையும், தமிழிறைமை சிதைக்கப்பட்ட கொடுமையினையும், தமிழிறைமை இழப்பின் பின்விளைவுகளையும் இணைத்துப் பார்க்க வேண்டும். இவை அனைத்தும், மகாவம்சச் சித்தாந்தத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதால், இது தமிழர்களுக்கு எதிரான ஒரு இனவழிப்பு என்பது உறுதியாகிறது.
2009ம் ஆண்டில் தமிழர்கள் சரணாகதி அடையவில்லை என்பதனால், தமிழிறைமையின் கோட்பாடு அழிக்கப்படவில்லை. இவ்வடையாள அட்டையின் மூலமாக தமிழர்களுக்கு எதிரான இனவழிப்பைத் தடுக்க முயல்வதோடு, நாம் தொடர்ந்தும் தமிழிறைமையின் பாலும், தமிழ்த் தேசியத்தின் பாலும் நிற்கின்றோம் என்பதனை உறுதி செய்கின்றோம்.
நிதி போதாமையால் சிறிய திட்டங்களை மட்டுமே செயற்படுத்த முடிகிறது. எமது குறிக்கோள்கள்: அரசியற்செயற்பாடுகளை மேற்கொள்வதும், தமிழீழத்தின் அடிப்படைக்கட்டுமானங்களை மேம்படுத்துவதும் ஆகும். உங்கள் ஒவ்வொருவரினது பங்களிப்பும் எங்கள் இலக்கை அடைய உதவுகிறது.
மாதப்பங்களிப்புகள்:
CHF 10.- சுவிச்சர்லாந்து
Euro 10.- ஐரோப்பா
USD 10.- அமெரிக்கா
KAD 10.- கனடா
RS. 100.- இந்தியா
AUD 10.- ஆஸ்திரேலியா
GBP 10.- கிரேட் பிரிட்டன்